Wednesday, May 11, 2011

நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை : புதிய முறையில் எண்ணுவதால் முடிவுகள் தாமதமாகும்

சென்னை : 
ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முழுமையாக முடிந்ததும், அதன் முடிவுகள் அறிவிக்கப்படும். இதனால், முன்னிலை வித்தியாசம் அறிந்து கொள்வதில் சற்று தாமதம் ஏற்படும். சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும் 13ம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். இதில், எந்த ஓட்டுச்சாவடியில் யாருக்கு எவ்வளவு ஓட்டுகள் பதிவாகின என்பதை அறிந்து கொள்ள முடியாத வகையில், மின்னணு இயந்திரங்கள் ஒரு சேர மாற்றப்பட்டு, எண்ணப்படுமென முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எந்த மாற்றமும் செய்யாமல், முன்பு எண்ணப்பட்டது போன்றே, பூத் வாரியாக மின்னணு இயந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ண முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்காக, அதன் மையத்தில் உள்ள அறையின் அளவை பொறுத்து, மேஜைகள் போடப்படும். ஒவ்வொரு மேஜையிலும், "வெப் கேமரா' வைக்கப்படும். எனவே, எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு ஓட்டுகள், ஒவ்வொரு சுற்றிலும் பதிவாகின என்பது இந்த கேமராவில் படம் பிடிக்கப்படும். அந்தந்த சுற்று முடிந்ததும், மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் திரையில் அந்த சுற்று ஓட்டுகள் வெளியிடப்படும். இதன் மூலம், தேர்தலுக்கு பின் யாராவது வழக்கு போட்டாலும், முதலில் கேமராவில் பதிவான விவரங்களை கொண்டு முடிவு எடுக்க முடியும். சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே, மீண்டும் மின்னணு இயந்திரங்களை எடுத்து சரிபார்க்க வேண்டியிருக்கும். காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கி, தபால் ஓட்டுகள் எண்ணப்பட்ட பின், மேஜை வாரியாக ஒவ்வொரு சுற்று ஓட்டுகளும் எண்ணப்படும். ஒரு சுற்று என்றால், மொத்தம் 14 மேஜைகள் இருந்தால், அவை ஒவ்வொன்றிலும் ஒரு ஓட்டுச்சாவடியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். முன்பெல்லாம், ஒரு மேஜையில் இரண்டாம் சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் போது, பக்கத்து மேஜையில் ஐந்தாவது சுற்று ஓடிக் கொண்டிருக்கும். இதனால், அந்தந்த மேஜையை பொறுத்து வேகவேகமாக முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை அவ்வாறு இல்லாமல், அனைத்து மேஜைகளிலும் ஒரு சுற்று முடிந்த பின்தான், அந்த சுற்றில் பெற்ற ஓட்டு விவரம் வெளியிடப்படும். அனைத்து மேஜைகளிலும் ஒரு சுற்று முடிந்த பின்தான், அடுத்த சுற்று ஓட்டுகள் எண்ண துவக்கப்படும். இதனால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும். எனினும், குழப்பமின்றி முடிவுகள் வெளியாகும். சில தொகுதிகளில் முன்பு, இரண்டு மணி நேரத்துக்குள் இறுதி நிலவரம் வெளியாகி விடும். தற்போதைய முறையால், பிற்பகல் 3 மணிக்கு மேல் தான் வெற்றி, தோல்வி பற்றிய இறுதி நிலவரம் தெரியவரும். ஒவ்வொரு சுற்று முடிவும், அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்களது ஏஜன்ட்களுக்கு தெரியப்படுத்தப்படுவதுடன், மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் பலகையிலும் வெளியிடப்படும். அத்தோடு, பெரிய திரையில் அனைவரும் காணும் வகையில் வெளிப்படுத்தப்படும்.

No comments:

Post a Comment