Wednesday, May 11, 2011

ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு

ஓட்டு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதலாக 18 துணை ராணுவப் படை உட்பட மொத்தம் 45 துணை ராணுவப் படைகளும், 75 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்,'' என தமிழக டி.ஜி.பி., போலோநாத் கூறினார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் 91 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை பணிகள் எந்த அளவிலும் பாதிக்காத வகையில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவின்போது இருந்த 27 துணை ராணுவப்படையினருடன், மேலும் 18 ராணுவப்படையினர் என மொத்தம் 45 துணை ராணுவப்படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். 18 துணை ராணுவப்படையினரும் சென்னை, திருச்சி, மதுரைக்கு விமானம் மூலம் இன்று வந்து சேர்கின்றனர். ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன், ஓட்டு எண்ணிக்கை மையங்களில், வெடிகுண்டு, வெடிமருந்து தவிர நாச செயல்களை முறியடிக்கும் வகையில், சிறப்பு காவலர்கள், மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்படும். ஓட்டு மையங்களில் குறைந்தபட்சம் 12 துணை ராணுவத்தினர் பயன்படுத்தப்படுவர். டி.எஸ்.பி., அளவிலான போலீஸ் அதிகாரி கண்காணிப்பில் இருப்பார்.

பாதுகாப்பு தொடர்பாக தேர்தல் கமிஷனின் அனைத்து விதிமுறைகளின் கீழ் செயல்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வீடியோ கான்பிரன்சிங் முறையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி அலுவலகங்கள், வேட்பாளர்கள் அலுவலகங்களுக்கும் போதிய பாதுகாப்பு கொடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏதும் வராது. அவ்வாறு வந்தாலும் அதை திறம்பட முறியடிக்கும் வகையில் போலீசார் தயார் நிலையில் இருப்பர். ஓட்டுப்பதிவு எப்படி அமைதியாக நடந்து முடிந்ததோ, அதைவிட ஓட்டு எண்ணிக்கையும் அமைதியாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கேற்ப அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு டி.ஜி.பி., போலோநாத் கூறினார்.

No comments:

Post a Comment